200 ஆண்டு பாரம்பரியம்; நேட்டோவில் இணைந்த ஸ்வீடன் - முடிவான நடுநிலை!
32 ஆவது உறுப்பு நாடாக நேட்டோவில் ஸ்வீடன் இணைந்துள்ளது.
ஸ்வீடன்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து ஸ்வீடனும், துருக்கியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வந்தன. இதனால், ரஷ்யா இருநாடுகளையும் எச்சரித்து வந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஃபின்லாந்து நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது. 75 ஆண்டுகால ராணுவ அணிசேரா கொள்கையில் இருந்த நாடு நேட்டோவில் இணைந்தது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நேட்டோவில் இணைப்பு
இந்நிலையில், அட்லாண்டிக் ராணுவ கூட்டணியான நேட்டோவில் 32 வது நாடாக ஸ்வீடன் இணைந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீடன் ராணுவ நிலைப்பாட்டைத் தவிர்த்து போர்க்காலங்களில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துவந்த நிலையில், தற்போதைய முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனை அதிகாரப்பூர்வமாக ஸ்வீடனின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் அறிவித்தார். அந்நிகழ்ச்சியில், அமெரிக்காவின் தலைமைச் செயலர் ஆண்டனி பிளின்கின் தலைமை தாங்கினார்.