இந்த நேரத்துல அரசியல் ஆதாயம் தேடுவீங்களா..? எஸ்.வி.சேகர் ஆவேசம்
பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமளிக்கிறது என பாஜக மூத்த நிர்வாகி எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
மழை பாதிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி,தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதியை பெற டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் மீட்பு பணிகள் குறித்து விவாதிக்கவும் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்தார்.
முன்னதாக, சென்னை ராஜ்பவனில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ருந்த நிலையில், அவர்கள் யாரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. இது குறித்து ஆளுநர் மாளிகை வருத்தம் தெரிவித்திருந்தது.
அரசியல் ஆதாயம் தேடுவது...
இதுகுறித்து எஸ்வி சேகர் தனது ட்விட்டர் வலைதளபக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம்.
இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும் என்று பதிவிட்டுள்ளார்.