மடத்துக்கு இடம் கொடுத்த பெண்ணுடனேயே திருமணம்; வெடித்த சர்ச்சை - ஆதீனம் விளக்கம்!
மடாதிபதி பெண் ஒருவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாலிங்க சுவாமிகள்
தஞ்சாவூர், திருவிடைமருதூர் அருகே அமைந்துள்ள சூரியனார் கோயில் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. பழமையான சைவ மடங்களில் இந்த கோயில் மடமும் ஒன்று. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள்(54) உள்ளார்.
இவர் கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ(47) என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இது ஆதீன மடங்கள் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சூரியனார் கோயில் மடத்தின் நிர்வாகமும் மடாதிபதி திருமணம் செய்து கொண்டதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 10 ம் தேதி மடாதிபதி மகாலிங்க சுவாமிக்கும், ஹேமாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கர்நாடகாவில் முறைப்படி பதிவுத் திருமணம் நடந்துள்ளது. இதில் முன்பிருந்த ஆதீனங்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவுத் திருமணம்
இது குறித்து மகாலிங்க சுவாமிகள் கூறுகையில், "நான் ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டது உண்மைதான். கர்நாடகாவில் வீரசைவ மடம், வைணவ மடம், பண்டிட் ரவிசங்கர் ஜி மடம், ராஜராஜேஸ்வரி பீடம் போன்ற மடங்கள் உள்ளன. ஆனால் சைவ மடம் அங்கு இல்லை.
இதனால் சைவ மடம் கட்டுவதற்கான ஏற்பாட்டை செய்தோம். இதற்கு பிடரி நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ வழங்கினார். மடம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அங்கு கட்டப்படும் மடத்தின் டிரெஸ்டியாக ஹேமாஸ்ரீயை நியமனம் செய்துள்ளோம்.
இந்தநிலையில் அவரை திருமணம் செய்துள்ளேன். சூரியனார் கோயில் ஆதீனத்தில் இதற்கு முன்பு மடாதிபதியாக இருந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பதால் இதில் பெரிய சர்ச்சைகள் எதுவும் இல்லை. ஆதினத்தின் பூஜைகள், நிர்வாகம் எப்போதும் போல் சரியாக நடக்கும். சூரியனார் கோவில் ஆதீனத்தில் ஹேமாஸ்ரீ பக்தராக மட்டும் வந்து செல்வார்" எனத் தெரிவித்துள்ளார்.