சொர்க்கபுர ஆதினத்தின் மடாதிபதியாக ரூ.5 லட்சம் கொடுத்தாரா நித்யானந்தா? -
திருவாரூரில் வீடு கட்ட ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதற்காக அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தாவை சொர்க்கபுர ஆதீனம் நியமனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே பண்டாரவடை திருமாளம் கிராமம் உள்ளது. பண்டாரவடை திருமாகாளம் என்ற பெயரே நாளடைவில் மருவி திருமாளம் என்று மாறியுள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 12ஆம் நூற்றாண்டில் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் என்பவரால் ஆதீனம் உருவாக்கப்பட்டு மடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த மடம் முழுவதுமாக சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.
சொர்க்கபுர ஆதீன மடத்திற்கு தமிழகம் முழுவதும் 62 கிளை மடங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில்,தற்போது தண்டபாணி தேசிகர் என்பவர் சொர்க்கபுர ஆதீன மடத்தை நிர்வகித்து வருவதோடு, ஆதீனத்தின் மடாதிபதியாகவும் இருந்து வருகிறார். சொர்க்கபுரி ஆதீன மடத்தின் சொத்துக்கள் சுமார் 2,500 ஏக்கர் இருக்கும் எனவும், அவற்றில் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றங்களில் தண்டபாணி தேசிகர் பல வழக்குகளை தொடுத்துள்ளார்.
மேலும் சொர்க்கபுர ஆதீன மடத்தை நிர்வகிக்க போதிய வசதி இல்லாததால் பல்வேறு ஆதீன மடங்களை மடாதிபதி தண்டபாணி தேசிகர் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.அந்த வகையில் தண்டபாணி தேசிகர், கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொண்டமண்டல ஆதீனத்தை சந்தித்து உதவி கேட்டுள்ளார். அவர் சாமியார் நித்யானந்தாவிடம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார்.
அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு இருவரும் சென்று நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான சுந்தரேச மகாராஜ் என்பவரை சந்தித்துள்ளனர். அவரும் நித்யானந்தாவிடம் தெரிவித்து மடத்தை புணரமைப்பு செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தொண்ட மண்டல ஆதீனம் பண்டாரவடை திருமாளத்திற்கு வந்து மடத்தினை ஆய்வு செய்யும் போது தண்டபாணி தேசிகர் வீடு சிதிலமடைந்து இருப்பதை பார்த்து நித்தியானந்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை புனரமைக்க நித்தியானந்தாவின் குழுவினர் சொர்க்கபுர ஆதீன மடாதிபதி தண்டபாணி தேசிகருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். சொர்க்கபுர ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்கவும் மடத்தினை புனரமைப்பு செய்து புதிய கட்டிடங்கள் கட்டித் தரவும் உறுதி அளித்துள்ளனர்.
அதற்கு பதிலாக தண்டபாணி தேசிகருக்கு பிறகு நித்யானந்தாவே மடத்தின் ஆதீன மடாதிபதியாக இருக்கவேண்டுமென கையெழுத்துப் போட்டு தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு சம்மதித்து தண்டபாணி தேசிகரும் பத்திரத்தில் கையெழுத்திட்டு அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரூ.5 லட்சம் தந்ததோடு இதுவரை மடத்திற்கான எந்த புனரமைப்புப் பணிகளும் செய்யப்படவில்லை என தண்டபாணி தேசிகர் கூறுயுள்ளார்.
அதேசமயம் ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தாவை சொர்க்கபுர ஆதீன மடாதிபதி நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.