ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டு போட்ட மக்கள்; திருமணத்தால் கொந்தளிப்பு - பின்னணி!
சூரியனார் கோவில் ஆதீனத்தை, கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
திருமண சர்ச்சை
தஞ்சாவூர், திருவிடைமருதூர் அருகே அமைந்துள்ள சூரியனார் கோயில் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. பழமையான சைவ மடங்களில் இந்த கோயில் மடமும் ஒன்று.
இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள்(54) இருந்தார். இவர் கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ(47) என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இது ஆதீன மடங்கள் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதீனம் வெளியேற்றம்
தொடர்ந்து, சூரியனார் கோயில் மடத்தின் நிர்வாகமும் மடாதிபதி திருமணம் செய்து கொண்டதை உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆதீனத்திடம் விசாரணை செய்து அவரது விளக்கத்தை பெற்றனர்.
இந்நிலையில், மகாலிங்க சுவாமி ஆதீனத்தை விட்டு வெளியேற வேண்டும் என போஸ்டர்கள ஒட்டப்பட்டது. மேலும், சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் முன் ஒன்று திரண்ட ஊர் மக்கள் சிலர், ஆதீனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் மடத்தில் இருக்கக் கூடாது என்று கூறி, ஆதீனத்தை வெளியேற்றி மடத்துக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து மகாலிங்க சுவாமிகள், அதே ஊரில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.