உயர் சாதியினர் அமைச்சரானால்தான் வளர்ச்சி கிடைக்கும் - அமைச்சர் சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு
பழங்குடியினர் குறித்த தனது பேச்சு சர்ச்சையானதால் பேச்சை வாபஸ் பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
சுரேஷ் கோபி
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு நாளை மறுநாள்(05.02.2025) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மலையாள நடிகரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உயர் ஜாதி அமைச்சர்
இதில் பேசிய அவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சராக முடியும் என்பது நாட்டின் சாபக்கேடு. பழங்குடி சமூகத்தை சேராத ஒருவரை இந்த துறைக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும்.
ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ இந்த துறைக்குப் பொறுப்பேற்கட்டும். அப்போதுதான் இந்த துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வேறு முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும்" என பேசினார்.
பேச்சு வாபஸ்
சுரேஷ் கோபியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சுரேஷ் கோபி சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கவே இதுபோல பேசுவதாகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் குரல் எழுந்துள்ளது.
தனது பேச்சு சர்ச்சையான நிலையில், "நான் யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை. எனது கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. என்னுடைய பேச்சு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை நான் திரும்பப்பெறுகிறேன்" என சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளார்.