பாராளுமன்றத்தில் சாதி சர்ச்சை; இது தான் ராகுல் காந்தி சாதி - காங்கிரஸ் பதில்
ராகுல் காந்தியின் சாதி குறித்த அனுராக் தாகூரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
அனுராக் தாகூர்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு ஏன் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பாஜக எம்.பி அனுராக் தாகூர், தன்னுடைய ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். இதே லோக்சபாவில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மிகக் கடுமையாக எதிர்த்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என கூறினார்.
ராகுல் காந்தி
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை அவமரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த அவதூறுகளை எல்லாம் மகிழ்சியாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன். அனுராக் தாகூர் என்னை அவமதித்தார்; இழிவுபடுத்தினார். அதற்காக நான் அவரை மன்னிப்பு கேட்க சொல்லவில்லை. ஆனால் இதே நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்றார்.
அதே வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அனுராக் தாகூர் பேசிய வீடியோவை பகிர்ந்து இதை அனைவரும் கேட்க வேண்டும் என பாராட்டினார். அனுராக் தாகூரின் சாதி ரீதியிலான பேச்சுக்கும் அதை பிரதமர் பாராட்டியதற்கும் எதிர் கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
This speech by my young and energetic colleague, Shri @ianuragthakur is a must hear. A perfect mix of facts and humour, exposing the dirty politics of the INDI Alliance. https://t.co/4utsqNeJqp
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
இந்நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, பாஜகவின் உண்மையான முகம் நேற்றைய கருத்து மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாட்டுக்காக உயிர்த் தியாகங்களை செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழிவுபடுத்தும் புத்தி பாஜக உடையதாக மட்டுமே இருக்கும். ராகுல் காந்தியின் தந்தையும் பாட்டியும் நாட்டிற்க்காக உயிர்த்தியாம் செய்தவர்கள். எனவே அவரது குடும்பத்தின் சாதி தியாகமே ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்போ, பாஜகவோ, அனுராக் தாகூரோ இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என கூறினார்.