உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஷ்யா போர்
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
ஆபரேசன் கங்கா
ரஷ்ய போரில் உக்ரைனில் இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கக்கோரி இந்திய மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை, அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டது.
இதன் பின்னர், ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து 5 விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும் இயக்கப்பட்டன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டார். ருமேனியா தலைநகர், புகாரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து இந்தியர்களை மீட்டு டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மாணவர்களுக்கு இடமில்லை
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி விவகாரம் தொடர்பாகவும், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்வி மாணவர்கள் இந்தியாவில் படிப்பை நிறைவு செய்ய அனுமதி குறித்து விரைவில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.