வரலாறு எதுவும் தெரியாமலேயே பேசுவதா ராகுல் - உச்சநீதிமன்றம் காட்டம்
ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
சாவர்க்கர் விவகாரம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி "சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தார். அவரிடமிருந்து பென்ஷன் பெற்றார்" என்று பேசியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தை அனுகினார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மகாத்மா காந்தி அவரது கடிதங்களில் 'உங்கள் பணிவான பணியாளர்' (Your faithful servant) என்று எழுதியிருக்கிறார். அப்படியென்றால் அவரும் பிரிட்டிஷார்களின் வேலைக்காரரா? அப்படித்தான் பொருள்படுமா? சாவர்க்கருக்கு எதிராக ஏன் இப்படியான பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சை பேசுகிறீர்கள்?
உச்சநீதிமன்றம் கேள்வி
நீங்கள் அரசியல் தலைவர்தானே! பின்னர் ஏன் சமூகத்தில் சலசலப்பை உருவாக்கும் வகையில் பேசுகிறீர்கள்? உங்களது பாட்டி, இந்திரா காந்தி, பிரதமராக இருந்தபோது, சாவர்க்கரை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. சுதந்திர போராட்ட வீரர்களை இப்படி பேசக்கூடாது.
இந்த முறை உங்களுக்கு இடைக்கால தடை கொடுக்கிறோம். ஆனால் அடுத்த முறையும் இப்படியான புகார்கள் எழுந்தால், நாங்களே நேரடியாக தலையீடு செய்து வழக்கை நடத்துவோம்" என நீதிபதிகள் டிபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு எச்சரித்துள்ளது.
இதில் ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்க்வி ஆஜராகியிருந்தார். ராகுல் இனிமேல் இப்படி பேசமாட்டார் என்று அவர் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.