7 மாதங்களாக தமிழக ஆளுநர் என்ன செய்தார்? உச்சநீதிமன்றம் கேள்வி
7 மாதங்களாக ஆளுநர் ஏன் தாமதம் செய்தார் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதம் பணப் பரிமாற்றம் மற்றும் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் "செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளை தமிழக அரசு வேண்டும்என்றே தாமதம் செய்கிறது. இந்த விவகாரத்தில் நடுநிலையான வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்" என்று ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆளுநருக்கு கேள்வி
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபயா எஸ்.போகா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு அளித்த கோப்புகளின் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்கிறார் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.
இதனையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் தரப்பு செய்த தாமதத்திற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜனவரி மாதம் தமிழக அரசு சார்பில் அனுப்பப்ட்ட கோப்புகளின் மீது 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்தது ஏன் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நேரடி கண்காணிப்பு
தமிழக அரசு சார்பில் வாஷிங்டன் தனசேகர் என்பவர் வழக்கு விசாரணைக்காக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
அரசின் சிறப்பு வழக்கறிஞர் தனது பணியை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் வழக்கு விசாரணையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் தற்போதைய நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.