நடிகர் கவுண்டமணிக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் கவுண்டமணி
சென்னை கோடம்பாக்கம்-ஆற்காடு சாலையில் கடந்த 1996-ம் ஆண்டு நடிகர் கவுண்டமணி 5 கிரவுண்டு நிலம் வாங்கினார். இந்த இடத்தில் 15 மாதங்களில் வணிக வளாகம் கட்ட வேண்டுமென, ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.
மேலும், இதற்காக ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின் படி கடந்த 2003-ம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறி கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனு தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவுண்டமணியின் நிலத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீண்டும் அவரிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்தது. மேலும், 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தது அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.