நீட் தேர்வு விவகாரம் - தேசிய தேர்வு முகமைக்கு முக்கிய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு
கடந்த மே 5 ம் தேதி, 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET-UG) நடத்தப்பட்டது.நாடு முழுவதிலும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய கூறி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் என பல இடங்களில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது சிபிஐ இது குறித்து விசாரித்து வருகிறது.
உத்தரவு
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பு, தேசிய தேர்வு முகமை என அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மனுதாரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒட்டு மொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும், குற்றசாட்டு நிருபிக்கப்படாமல் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என நீதிபதி அமர்வு கூறியது.
மேலும், வரும் சனிக்கிழமைக்குள்(20.07.2024) 12 மணிக்குள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை தேசிய தேர்வு முகமை தமது இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், இதில் மாணவர்கள் புகைப்படம் உள்ளிட்ட எந்த விவரங்களும் இருக்க கூடாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 22 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.