செந்தில் பாலாஜி வழக்கு; விசாரணையை எப்போது முடிப்பீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி
செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இன்னும் விசாரணை தொடங்கி தண்டனை கிடைக்காத நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜியை தண்டிக்க முடியுமா என அமலாக்க துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
செந்தில் பாலாஜி
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஜோசப் ஹுசைன், 3 வது நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் ஆஜராக வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒருநாள் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இன்னொரு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்காக இந்த நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைப்பதா? இது சரியான கருத்து அல்ல என கண்டனம் தெரிவித்தார். இன்னும் 500 க்கும் மேற்பட்டோரிடமிருந்து வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணையை எப்பொழுது நடத்தி முடிப்பது என எங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "வழக்கை 6 மாதத்தில் முடிவுக்கு கொண்டு வருவோம். ஆனால் தமிழ்நாடு அரசு விசாரணையை தாமதப்படுத்துகின்றது" என்று கூறினார்.
"ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால் அதற்கான முகாந்திரங்களை பார்க்க வேண்டி உள்ளது. விசாரணை முடிவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறி உள்ளது. அதை சுட்டிக்காட்டி தான் நான் பிணை கேட்கின்றேன்" என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடினார். வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.