செந்தில் பாலாஜி 67 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் - அமலாக்க துறை பரபரப்பு தகவல்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 67 கோடி கிடைத்துள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை தரப்பில், “போக்குவரத்துத் துறையில் நடத்துனர், பொறியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட வேலைகளுக்கு 1.50 லட்சம் முதல் 8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்றுள்ளனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு மொத்தம் 67.2 கோடி ரூபாய் லஞ்சமாக கிடைத்துள்ளது. பண மோசடிக்கு புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பில் இவை தெரியவந்துள்ளது ” என்று வாதம் வைக்கப்பட்டது.
மேலும், மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது. தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையிலோ, நீதிமன்றத்தில் உள்ள ஆதாரத்திலோ அல்லது அமலாக்கத்துறை அறிக்கையிலோ, ஆதாரத்திலோ எந்த முரண்பாடும் இல்லை. குறிப்பாக பண மோசடி விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கும் சண்முகம், கார்த்திக் ஆகியோருக்கு இடையிலான நெருங்கிய தொடர்புக்கான வங்கி ஆவண ஆதாரங்கள் உள்ளன என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மின்னஞ்சல் ஆதாரங்கள்
தொடந்து, செந்தில்பாலாஜி குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார். எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எப்போது உருவாகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாங்கித் தருவது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்கில், இன்னும் விசாரணை தொடங்கி தண்டனை கிடைக்காத நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜியை தண்டிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை வைத்தார் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கினை வரும் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.