திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றிய பிரபல நடிகை - இளைஞர் புகார்!
இளைஞர் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துணை நடிகை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும், சில விளம்பரப் படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
யூடியூபர்
இவரை நடிக்க வைத்து கவிதை தொகுப்புகளை இணைத்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார் ஆனந்த்ராஜ். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்த்ராஜ் வீட்டில் திவ்யபாரதியை திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த்ராஜிடம் இருந்து மாதந்தோறும் செலவுக்கு ரூ.30 ஆயிரம் வாங்கி வந்துள்ள திவ்ய பாரதி, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவ செலவுக்காக ரூ.9 லட்சம் வாங்கி உள்ளார்.
30 லட்சம் மோசடி
அதுமட்டுமின்றி ஆனந்த்ராஜை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 8 பவுன் தங்க நகைகளையும் வாங்கி இருக்கிறார் ஆனந்த்ராஜ் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறும்போதெல்லாம் சண்டையிட்டு வந்துள்ளார் திவ்யபாரதி.
இதனால் அவர் மீது ஆனந்த்ராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திவ்யபாரதி பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவரைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த ஆனந்த்ராஜ் திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.