இஸ்ரேலை கண்டித்து போராட்டம்; அமெரிக்காவில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி கைது!
இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கோவை மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம்
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாக்குதலில் உயிரிந்துள்ளதனர். இதற்கிடையில், பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மாகாணம் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து மக்கள் போராடினர்.
தமிழ் மாணவி
இதை தொடர்ந்து, பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் கைது செய்யப்பட்ட அச்சிந்தியா சிவலிங்கம் என்னும் மாணவி தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் என்பதும் அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும் அந்த பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாணவியின் பூர்வீகம் கோவை என்றாலும் அவர் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரின் ஓகியோவில் வளர்ந்தவர்.
ஓகியோ பல்கலைகழகத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தற்போது பிரஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். தற்போது அவர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால் பல்கலைகழத்தில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹசன் சயீத் மற்றும் அசிந்தியா சிவலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.