சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடை? முக்கிய அறிவிப்பு
சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் போராட்டம்
தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 5,000 லாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகளை ளர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இந்த போராட்டம் 3வது நாளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
வினியோகம் தடை?
புதிய ஒப்பந்தப்புள்ளி விதிகள், அரசு மற்றும் மத்திய கண்காணிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேம்படுத்துவதற்காக, புதிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில டிரான்ஸ்போர்ட்டர்கள் பாதுகாப்பு விதிகளுக்கான அபராதங்களை நீக்க கோரியுள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளன. தற்போது வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வினியோகம் வழக்கம் போல் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.