மசோதாவை கிடப்பில் போட்டு ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆளுநர் அரசு மோதல்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்குமிடையே மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தயாரிக்கும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வது என அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை
இந்த வழக்கு நேற்று(05.02.2025) நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜரானார்.
இதில் ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையேயான மோதலால் மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படுகிறது. ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை நாளை(06.02.2025) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
மௌனமாக இருக்கலாமா?
இந்நிலையில் இந்த வழக்கு இன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். விசாரணையில், "மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா?
'நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என்று ஆளுநர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா இல்லையா? அப்படி கூறவில்லை என்றால், அவர் ஏன் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் வரை, ஆளுநர் ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா?
மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறும்போது, எந்த காரணத்துக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் தானே கூறவேண்டும். மசோதா மறுபரிசீலனை எதற்கு என்று ஆளுநர் கூறவில்லை என்றால், அரசு எதன் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.