ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றி விடவேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பாஜக விரிக்கும் வலையில் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டத் துறை மாநாடு
சென்னையில் திமுக சட்டத் துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (18.01.2025) நடைபெற்றது. இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நாட்டுக்கே ஒரே தேர்தல்
இதில் பேசிய அவர், பாஜகவைப் பொறுத்தவரைக்கும் அதன் திட்டங்கள் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள்.
இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது.
கூட்டணி கட்சிகள்
பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
'பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது' என்று பாஜக தரப்பு சொன்னபோது, 'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும்' என சரியாக சொன்னவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி.
ஆர்.என்.ரவி
தன்னுடைய செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகளை மெதுவாக சமூகத்தில் விதைக்க பார்க்கின்றனர். அதற்கு துணையாக பல எடுபிடிகளை பேச வைப்பார்கள். மீடியாக்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களை கட்டமைப்பார்கள். அளவில்லாமல் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பா.ஜ.,வின் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதை தாண்டி தான் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.
நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர்.
நான் கவர்னரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர் பேசப் பேசத்தான் நாட்டில் பாஜக அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சேர்கிறது" என பேசினார்.