குஜராத் தொடர்பு; பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள் - யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சுனிதா வில்லியம்ஸ்
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் பாண்டியா(மருத்துவர்). இவரது மனைவி உர்சுலின் போன்னி, ஸ்லோவேக்கியாவைச் சேர்ந்தவர். இவர்களது மகள்தான் சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதாவின் கணவர் மைக்கேல் ஜெ. வில்லியம்ஸ். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அகமதாபாத்திலிருந்து பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்தார். 2008ல் மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து, புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதா, 1998-ம் ஆண்டு நாசாவில் இணைந்தார். இவர் இதுவரை இரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்துள்ளார்.
பூர்வீக விவரம்
அங்கு 322 நாள்களை கழித்துள்ளார். க்ரூ-9-ன் உறுப்பினர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 900 மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர். சைக்கிளிங், துடுப்பு போடுதல், உள்ளிட்ட உடற்பயிற்சிகளை ஒருங்கிணைந்து செய்யக்கூடிய E4D என்ற கருவியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் உள்ள ட்ரெட்மில்லில் நடந்து நான்கரை மணி நேரத்தில் பாஸ்டன் மராத்தானுக்காக நிர்ணயித்த தூரத்தை கடந்துள்ளார். 2012-ஆம் ஆண்டு, விண்வெளியில் டிரையத்லான் மேற்கொண்டு சாதனை படைத்தார். முன்னதாக, விண்வெளிக்கு சமோசா மற்றும் பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது.
பின் பகவத் கீதை தனது தந்தை கொடுத்தது என்றும், அது தனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டி ஜுலாசன் கிராம மக்கள் 'அகண்ட் ஜியோத்' என்று அழைக்கப்படும் தீபத்தை ஏற்றி வைத்து அதை அணையாமல் பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது இவர் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர்.