என் சாவுக்கு மாமியார் தான் காரணம்.. - 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!
திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண், மாமியார் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் இந்துமதி (25). கடந்த பிப்ரவரி மாதம், இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்துமதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஆனால், திருமணம் ஆனதிலிருந்தே இந்துமதியை அவரது மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததால், ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால், கணவர் இந்துமதியை வந்து பார்க்கவும் இல்லை. சமாதானம் செய்யவும் இல்லை. இதனால், விரக்தியில் இந்துமதி இருந்து வந்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
இதனையடுத்து, தனது அக்காவிற்கு போன் செய்து, என் சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் இந்த உலகை விட்டு செல்கிறோம் என்று வாட்ஸ் அப்பில் ஆடியோவாக பதிவு செய்து அனுப்பி இருக்கிறார். இதைப் பார்த்து பயந்து போன இந்துமதியின் அக்கா அம்மா வீட்டிற்கு விரைந்து ஓடி வந்துள்ளார்.
போலீசார் விசாரணை
அதற்குள் இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.