சகோதரியை காதலித்த என்ஜினீயர் - எஸ்ஐ மகன் வெறிச்செயல்!
சகோதரியை காதலித்த இளைஞரை சப் இன்ஸ்பெக்டர் மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
காதல் விவகாரம்
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இருவரும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரது மகளும், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் (26) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கவின் குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
ஆணவக் கொலை?
இந்த விவகாரம் வீட்டில் தெரிந்ததால், கவின் குமார் பழங்குடியின சமூகம் என்பதால் பெண் வீட்டார் இந்த பழக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் பாளையங்கோட்டை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் அவரை பார்க்க கவின் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கவின்குமாரை சந்தித்து பேசுவதற்காக வந்துள்ளார். தொடர்ந்து சகோதரியிடம் பழகுவதை கைவிடுமாறு சுர்ஜித் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு, சுர்ஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.