உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் ஓனர் - ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ!
ஓட்டல் உரிமையாளரை காலணியை கழற்றி தாக்க முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்எஸ்ஐ செய்த செயல்
தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ காவேரி அந்த ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார்.
சாப்பிட்டு முடித்த பின் உணவுக்குப் பணம் கொடுக்குமாறு ஓட்டல் உரிமையாளர் கேட்டுள்ளார். உடனே, கோபமடைந்த எஸ்எஸ்ஐ பணத்தை எடுத்து மேஜை மீது வீசியபடி, ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
தொடர்ந்து, காலில் அணிந்திருந்த காலணியை (ஷூ) கழற்றி அவரைத் தாக்க முயன்றுள்ளார். தொடர்ந்து அங்குள்ள பணியாளர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், சம்பவம் குறித்து விசாரிக்குமாறு டிஎஸ்பி சிவராமனுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் எஸ்எஸ்ஐ காவேரி தவறு செய்தது உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.