நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - வெளியான பதறவைக்கும் வீடியோ!
பிரபல ‛நீட்’தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பிரம்பு, காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு
இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை மருத்துவ படிப்புக்கும் ‛நீட்’ தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவ - மாணவிகள் பலரும் ‛நீட்’ தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
இதற்காக அரசு தரப்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு தரப்பு மாணவர்கள் வீடுகளிலிருந்தபடியே தங்களது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டலின்படி ‛நீட்’ தேர்வுக்குப் படித்து வருகின்றனர்.அதேபோல் மற்றோறு தரப்பு மாணவர்கள் லட்சக்கணக்கான பணத்தைச் செலவழித்து ‛நீட்’ தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அந்த வகையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ‛நீட்’ தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது.
தாக்கும் வீடியோ
இந்த பயிற்சி மையத்தில் பிரம்பு, காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவில் அதேபோல் பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ - மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர்.
அப்போது உள்ளே வரும் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.அந்த காலணி மாணவி மீது விழுகிறது.அதுமட்டுமில்லாது மாணவர்களை ஆக்ரோஷமாகத் திட்டி மாணவர்களை வரிசையாக வரவைத்து பிரம்பால் கண்மூடித்தனமாக மிகவும் கொடூரமாகத் தாக்குகிறார்.
இதில் சில மாணவர்களின் கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து காவல்துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.