பாலியல் புகாரில் கைதான அரசு பள்ளி ஆசிரியர்கள்...மாணவிகள் சாலையில் போராட்டம்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கைது
திருவள்ளுவரை அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு ஏராளமான புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், மாணவிகள் சிலர் கணித ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சாலையில் போராட்டம்
இதை தொடர்ந்து, அந்த 2 ஆசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும்,போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர்-ஆவடி சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.