விடைத்தாளில் மாணவர்கள் எழுதிய ஜெய் ஸ்ரீராம் - மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்!
மாணவர்கள் விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் என்று எழுதியத்துக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கியது சர்ச்சையாகியுள்ளது.
ஜெய் ஸ்ரீராம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு பயம் இருக்கும். பொதுவாக தேர்வில் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். குறிப்பாக விடைத்தாளில் சரியான விடையை அளித்திருந்தாலும் ஏதாவது குறையை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி அதற்கு மதிப்பெண்கள் குறைப்பது தானே வழக்கம்.
ஆனால் ஜான்பூரில் உள்ள உத்தரபிரதேச மாநில பல்கலைக்கழகமான ’வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடைத்தாள் முழுக்க ஜெய் ஸ்ரீராம் என எழுதியதற்கு மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர் ஆர்டிஐ-யை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, சில மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அப்போது, பார்மசி படிப்பின் விடைத்தாள்கள் முழுக்க 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
மதிப்பெண்கள்
இடையில் அம்மாணவர்களுக்கு பிடித்த முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் கிறுக்கி வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வினாத்தாளில் கேட்ட கேள்விகளுக்கு உரிய விடை என்று எதுவும் எழுதவில்லை. இருப்பினும் அவர்களுக்கு பேராசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். இதை முறைப்படி மீண்டு திருத்தியதில், அனைவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்கள்.
ஆர்டிஐ தாக்கல் செய்த முன்னாள் மாணவர், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநருக்கு ஆர்டிஐ விவரங்களை அனுப்பியதோடு, இவை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் ம்பந்தப்பட்ட துறையின் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.