நீதி எல்லாம் வெறும் படத்தில் மட்டும்தானா? இன்னும் எத்தன உசுர இழக்கனும் - உதயநிதியிடன் மாணவன் ஆவேசம்!
அமைச்சர் உதயநிதியிடம், மாணவன் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது ஜெகதீஸின் நண்பர் ஃபயாஸ், ‘’நீதி எல்லம் வெறும் படங்களில் மட்டும்தானா? மத்திய அமைப்புகளை நம்மால் ஏதும் செய்ய முடியாதா?
மாணவன் ஆவேசம்
எத்தனை ஜெகதீஷ்... எத்தனை அனிதாவை... நாங்கள் இழக்கணும். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கைகள் தான், பன்னிரண்டாவது முடித்து விட்டு எதற்கு ஜே. இ.இ போன்ற தேர்வுகள்? அப்புறம் எதுக்கு 12 வது படிக்கிறோம்னே தெரியலை.
ஆளுநருக்கு எதிராக உங்களால ஒன்னும் பண்ண முடியாதா? என கேள்வி எழுப்பினார். அதனைக் கேட்ட உதயநிதி உனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறி காரில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் நீட் விலக்கு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வேறு உலகத்தில் உள்ளார், தமிழ்நாட்டின் மனநிலையை அவர் புரிந்து கொள்ளவே இல்லை. நீட் விலக்கு மசோதாவை முதலமைச்சர் அழுத்ததால் டெல்லிக்கு அனுப்பிவிட்டார் ஒன்றிய பாஜக அரசுதான் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.