தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது - மத்திய அரசு கறார்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலின திருமணம்
2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அளித்தது. ஆனால் அவர்களின் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, தன்பாலின தம்பதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட்ட வேண்டும். தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல் சாசன பிரிவு 14,21-ஐ மீறுவதாகும் எனவே தன்பாலின உறவாளர்களின் திருணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
மத்திய அரசு மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு, மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். அதன்படி மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது என்பது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல.
கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்குல் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும் என்று பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில்,கனடா, சிலி, கொலம்பியா,கோஸ்டாரிகா உள்ளிட்ட நாடுகளில் மட்டும் தான் தன் பாலின திருமணத்திற்கு அரசு அங்கீகரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.