ஒரே நாளில் நாட்டை உலுக்கிய 155 நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை - 16 அடி உயரத்துக்கு எழுந்த அலைகள்!
ஒரே நாளில் 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
ஜப்பானில், மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணம், அனாமிசு நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கம் பதிவாகியது. அடுத்த சில நிமிடங்களில் 6.2 ரிக்டர், 5.2 ரிக்டர் என அடுத்தடுத்து பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 80 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், அனாமிசு, சுசூ, வாஜிமா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. மின் விநியோகமும் முழுமையாக தடைபட்டது.
24 பேர் பலி
அதனைத் தொடர்ந்து, இஷிகாவா, நிகாட்டா, டோயாமா ஆகிய மாகாணங்களின் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த 3 மாகாணங்களில் கடற்கரை பகுதிகளில் 3 அடி முதல் 16 அடி உயரம் வரை சுனாமி பேரலைகள் எழுந்தன.
அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய பூகம்பங்கள் தொடரக்கூடும். சுனாமி அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடிக்கக்கூடும். பூகம்ப,சுனாமி அச்சுறுத்தல் ஒரு வாரம்வரை நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜப்பானில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகிறோம்.
உதவி தேவைப்படுவோர் இந்திய தூதரகத்தை அணுகலாம். அங்கு, சுமார் 50,000 இந்தியர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது.