அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!
அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாதிப் பெயர்கள்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வும் விசாரித்து வந்தது. கடந்த புதன்கிழமை அன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வராயன் மலை பகுதி தொடர்பாக தமிழக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது.
அதனை பார்த்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி, அரசு தரப்பிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதாவது, மலைப்பகுதிகளில் 150 பள்ளிகளில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா?
எனவும், பள்ளிகளில் சாதிப்பெயர் இருப்பதைக் குறிப்பிட்டு மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளியில் சாதி பெயரில் இருக்கலாமா? எனவும் கேள்வி எழுப்பினார். தெருக்களில் உள்ள சாதி பெயரை மாற்றியது போல, அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள் என நீதிபதி அறிவித்துள்ளார்.