மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து மனு
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கடந்த 2023-ம் ஆண்டு தனக்கு திருணம் நடைபெற்றதை அடுத்து, வெறும் 17 நாட்களில் கணவரை பிரிந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும், தனது கணவர் தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுத்துவிட்டார். கணவருக்கு தன்னுடன் உறவு கொள்வதில் நாட்டமில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருவராலும் ஒன்றிணைய முடியவில்லை" என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அந்த பெண்ணின் 27 வயது கணவர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தனது மனைவியுடன் மட்டுமே தன்னால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை. மற்றபடி தனக்கு எந்த குறைபாடும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார். மேலும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து கோரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் அமர்வு நீதிமன்றத்தில் அந்த நபர் மேல்முறையீடு செய்தார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், "திருமணத்திற்குப் பிறகு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒன்றிணைய முடியாத இளம் தலைமுறையினருக்கு இது ஒரு எடுத்துக்காட்டான வழக்கு. குறிப்பிட்ட ஒரு நபருடன் மட்டும் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்பது பொதுவான ஆண்மைக் குறைவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு நபர் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தாலும், மனைவியுடன் அதைச் செய்ய இயலாத சூழ்நிலையில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் இருக்கலாம். இந்த வழக்கில் கணவருக்கு மனைவியுடன் உறவு கொள்வதில் நாட்டம் ஏற்படவில்லை என்பது தெரியவருகிறது. இதை அந்த கணவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இவர்களது திருமணம் பூர்த்தியாகவில்லை. இந்த இளம் ஜோடி எதிர்கொண்டு வரும் விரக்தியை நாம் புறக்கணிக்க முடியாது" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.