பைக்கில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய விநோத முயல் - ரூ.10,000 ஃபைன் போட்ட போலீஸ் !
வித்தியாசமான உருவம் கொண்ட ஹெல்மெட் அணிந்து பைக்கில் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் தேடி பிடித்து அபராதம் விதித்துள்ளனர்.
விநோத ஹெல்மெட்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே வாலிபர் ஒருவர் அபாயகரமான முறைகள் பைக்கை ஒட்டி சென்று வந்துள்ளார். அந்த வாலிபர் விநோதமான ஹெல்மெட் ஒன்றையும் அணிந்தபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.
அந்த ஹெல்மெட்டானது பார்ப்பதற்கு முயல் உருவத்துடன் வித்தியாசமாக இருந்துள்ளது. பொதுவாக வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், தங்கள் முகம் வெளியில் தெரியாமல் இருக்க இதுபோன்ற ஹெல்மெட்டை பயன்படுத்துவார்கள். இதனைக் கண்டதும் அப்பகுதி மக்களும், சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.
போலீசார் நடவடிக்கை
இதனால் அந்த வாலிபரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்தனர்.
அதில், அந்த வாலிபர் தென்காசி மலையான் தெருவை சுஜித் (வயது 23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும் அவரின் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.