கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படும் தொடர்வண்டித்துறை பணியிடங்கள் - கொந்தளித்த சீமான்

Tamil nadu Seeman Kerala Railways
By Vidhya Senthil Oct 26, 2024 03:34 AM GMT
Report

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள் 

இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தொடர்வண்டித்துறை மேற்கு, கிழக்கு, தெற்கு, கொங்கன் உள்ளிட்ட 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, காலிப்பணியிடங்கள் 21 தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. தென்னகத் தொடர்வண்டித்துறை சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு என்று 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

seeman

சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலமும், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

 

கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!

கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை கோட்டம், கேரளாவின் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுவதால் மதுரை கோட்டத்திற்குட்பட்ட தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற முடிவதில்லை.

 தமிழ்நாட்டு இளைஞர்கள்

மாறாக, தமிழ்நாட்டின் காலிப்பணியிடங்கள் தமிழ்த் தெரியாத கேரள மாநிலத்தவரால் முழுவதுமாக நிரப்பப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் வங்கி, வருமானவரித்துறை,

அமலாக்கத்துறை உள்ளிட்ட நிர்வாக அலுவல்களிலும், குடிமைப்பணிகளிலும் வேற்றுமாநிலத்தவர் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டி பணிகளிலும் வேலைவாய்ப்பு உரிமை பறிபோவது சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

seeman press meet

ஏற்கனவே திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணிமனையில் பெருமளவில் வட மாநிலத்தவர் பணியமர்த்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய பேரியக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகே தமிழர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக தென்னகத் தொடர்வண்டித்துறையின் மதுரை கோட்டத்தை, சென்னை தேர்வு வாரியத்தின் கீழ் இணைத்து தமிழ்நாட்டு பணியிடங்கள் தமிழர்களுக்கே என்ற அடிப்படை உரிமையை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டத்தை நாதக முன்னெடுக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.