குடும்ப சண்டையில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்ன ஒரு வார்த்தை - 3 கோடி இழப்பை சந்தித்த ரயில்வே
ஸ்டேஷன் மாஸ்டர் சொன்ன ஒரு வார்த்தையால் ரயில்வே துறை ரூ.3 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
ஸ்டேஷன் மாஸ்டர்
குடும்ப சண்டை காரணமாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்ன ஒரு வார்த்தையால் இந்திய ரயில்வே ரூ.3 கோடி இழப்பை சந்தித்துள்ளது. சர்ச்சைக்குரிய ஸ்டேஷன் மாஸ்டர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது மனைவி சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் பகுதியில் வசித்து வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருப்பதாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ரூ.3 கோடி அபராதம்
சம்பவத்தினத்தன்று, ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் இருந்தபோது, மனைவியுடன் செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ”எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பேசிக்கொள்ளலாம், ஓகே?” என கூறிவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் போனை கட் செய்துள்ளார்.
இதனிடையே, ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியுடன் போனில் பேசும்போது தனது மைக்ரோஃபோனை ஆன் செய்து வைத்துள்ளார். அப்போது எதிர்தரப்பில் இருந்த சக பணியாளர், அவர் சொன்ன ”ஓகே” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் தவறாக புரிந்துகொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட பாதைக்குள் சரக்கு ரயிலை செலுத்தியுள்ளார்.
நல்வாய்ப்பாக ரயில் விபத்து எதுவும் ஏற்படாவிட்டாலும், நக்சல் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் விதிகளை மீறி இரவில் ரயில் செலுத்தப்பட்டதால், ரயில்வேதுறைக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விவாகரத்து
மேலும், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என விசாகப்பட்டினம் குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால்,கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவரது அண்ணியுடன் கணவருக்கு தகாத உறவு இருப்பதாகவும் அவரது மனைவி புகாரளித்துள்ளார்.
இதனால் விவாகரத்து மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையில், மனைவியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.