மாநில தலைவர் பதவி - வெங்காயம் போன்றது...அதிரடி காட்டும் அண்ணாமலை
டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக நிலை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதிமுக கூட்டணியை முறித்து கொண்ட நிலையில், இது பாஜகவிற்கு சற்று கடினமான காலமே. கூட்டணி முறிவிற்கு அதிமுக மாநில தலைமையின் செயல்படை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில், அது பெரும் கேள்விகளை அண்ணாமலை நோக்கி வைக்க துவங்கியது.
அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், ஆனால் தற்போது வரை கூட்டணி குறித்து எந்த கருத்தும் பேசவில்லை. இதற்கிடையில், அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கூட்டணி முறிவு தேசிய தலைமை சற்று அதிருப்தியில் இருக்கும் சூழலில் அதன் நீட்சியாக அவர் நீக்கப்படாமல் என்று அரசியல் வல்லுநர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
வெங்காயம் போன்றது
இந்நிலையில், இன்று கட்சியின் தேசிய தலைமையை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என கூறி, அனுசரித்து செல்லும் பழக்கம் தன்னிடம் எப்போதும் கிடையாது என்றும் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
கட்சியை வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்று கூறிய அண்ணாமலை, கூட்டணி பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்து யாரை பற்றியும் தான் தவறாக சொல்ல மாட்டேன் என கூறினார். தான் தன்னுடைய தனி உலகத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி என்பதால் பாஜக மீது அனைவருக்கும் வெறுப்பு என சுட்டிக்காட்டி, டெல்லிக்கு செல்வதால் என்ன நடந்துவிட போகிறது என கூறி, தான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பேன் என்று தன் மீது இரண்டரை ஆண்டுகளாக எல்லோரும் கல் வீசுகிறார்கள் என்றார்.