"ஆளுநருக்கு அறிவுரை சொல்லுங்கள்" - குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் சந்தித்து, தமிழ்நாடு ஆளுநர் குறித்து முறையிட்டுள்ளனர்.
ஆளுநர் சர்ச்சை
முதலமைச்சர், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தையும் கொடுத்துள்ளனர் . இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும், உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார்.
இது தமிழக சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறிய செயலாகும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே போற்றும் தலைவர்களின் பெயர்களை படிக்காமல் தவிர்த்ததை அவைக் குறிப்பில் பதிவு செய்யும் விதமாக முதலமைச்சர் அவர்கள் ஒரு திருத்தத் தீர்மானத்தை கொண்டு வந்து, அது சட்டமன்றத்திலிருந்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது,
ஜனாதிபதிக்கு கடிதம்
ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வான ஒன்று, அதனை நாம் அனைவரும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். இம்மாநிலத்தில் பின்பற்றப்படும் திராவிட கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.
மேலும், பொதுமேடைகளில் அவர் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே சட்டமன்றத்தின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது.
ஆளுநர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1)-ன்படி ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின் படி நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.