2030 ஆம் ஆண்டுக்குள் இதுதான் எனது லட்சிய இலக்கு - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் பணியாளர் குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஃபாக்ஸ்கான் பணியாளர் குடியிருப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் - வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
18,720 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் 706.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று (17.08.2024) மாலை நடைபெற்றது. இந்த குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் பணியாளர்களுக்குச் சாவிகளை வழங்கினார்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பின் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "2023-24 இல் இந்தியாவின் ஜிடிபியில் 1.19% பங்களிப்போடு 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் தொழிற்பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 41,000 பணியாளர்களில் 35,000 பேர் பெண்கள்.
தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளேன்" என பேசியுள்ளார்.