இலவச மின்சார இணைப்பு - தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
இலவச மின்சார இணைப்புகளை கணக்கெடுக்க மின்சார துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச மின்சாரம்
தமிழகத்தில் விவசாய பணிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருவது முக்கியமான திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயை மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.
கணக்கெடுப்பு
இந்நிலையில் விவசாய பணிகளுக்கு என கூறி மின்சாரம் பெற்று விட்டு அதை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன. ஏற்கனவே மின்சார துறை கடும் நிதி சுமை உள்ள நிலையில் தற்போது தமிழக அரசு அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மின் வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.