பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் பாஜக நடத்தும் பாத யாத்திரை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இளைஞரணி கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் அவர் பேசுகையில், "திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு 70 வயது ஆனாலும் தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன்.
234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. 2019ல் உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எதிரிகளால் இப்போதும் மறக்க முடியவில்லை. கட்சிப் பணி, ஆட்சிப் பணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து திமுக ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறார் உதயநிதி" என்று கூறியுள்ளார்.
பாஜகவின் பாத யாத்திரை
இதனை தொடர்ந்து, அவர் "பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழக வந்தார். அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் தான் பாத யாத்திரை தொடக்கம். மணிப்பூருக்கு சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை?.
மக்கள் மனதில் இருந்து பெரியார், அண்ணா திராவிட கருத்தியல் மறைந்துவிடும் என நினைத்த எதிரிகளின் ஆசையில் மண் விழுந்துவிட்டது. சுயமரியாதையும், பகுத்தறிவும் உடைய சமூகமாக மாற்றிய திராவிடத்தின் வாரிசுகளாக நாம் இருக்கிறோம். நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.