ஆளுநரா? ஆரியநரா? தேசிய கீதத்தில் திராவிடத்தை விடுவாரா? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி நிகழ்வு
சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையமான 'டிடி தமிழ்' சார்பில் இன்று மாலை, இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வழக்கமாக தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதே போல் இந்த நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடு" என்ற வார்த்தையை விட்டு பாடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கண்டனம்
இந்த செயலை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
ஆளுநரா? ஆரியநரா?
— M.K.Stalin (@mkstalin) October 18, 2024
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு… pic.twitter.com/NzS2O7xDTz
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தி விழா கொண்டாடுவதற்கே அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்தாய் வாழ்த்தில் திராவிட என்ற வார்த்தையை விட்டு பாடியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.