உயர்கல்வி வரை குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்திக்கு மீறியும் உழைப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விருதுநகர் சுற்றுப்பயணம்
2 நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம்(09.11.2024) குழந்தைகள் காப்பகம், பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.
இதனையடுத்து, இன்று(10.11.2024) ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கல்விச் செலவு
இதன் பின் பேசிய அவர், "பெருந்தலைவர் காமராஜரை நமக்கு அளித்த மண் விருதுநகர். விருதுநகர் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் வருவதற்கு சங்கரலிங்கனார் செய்த தியாகமும் காரணம்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.5 கோடி அரசு வழங்கும்.
சிப்காட் தொழில் வளாகம்
தமிழகத்திலேயே அதிகளவு உயர்கல்வி சேர்க்கை விருதுநகர் மாவட்டத்தில் தான் நடைபெறுகிறது. அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும்.
இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'இந்தியா டுடே' சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான். உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் இந்த ஸ்டாலின் பலம்.
தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்திக்கு மீறியும் உழைப்பேன் போராடுவேன். இந்த உழைப்பின் பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. முதலிடம் வந்ததற்காக ஒரு போதும் நான் திருப்தியடைந்ததில்லை. இன்னும் வேகமாக ஓட வேண்டும். அதைதான் அமைச்சர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.
பழனிசாமி
மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக உளறி இருக்கிறார். அதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஒருவர் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று வேடிக்கையாக சொல்வார்கள். இனிமேல் இதை மாற்றி பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்று தான் இப்பொழுது சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.
நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பியான கலைஞர் பெயரில் செய்து வரும் மூலதன செலவு என்ன? எளிய மக்களுக்கான திட்டங்கள் என்ன என இந்த மேடையில் என்னால் மணிக்கணக்கில் பேச முடியும். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மகளிர் உரிமை தொகை இதெல்லாம் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் இல்லையா மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அவர்களே? இப்படி வாய் துடுக்காக பேசிதான் தொடர்தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் உங்கள் தோல்வியைதான் தருவார்கள்" என பேசினார்.