புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்... - விஜய்யை மறைமுகமாக சாடிய ஸ்டாலின்
மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பின் பேசிய அவர், "தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா நிலைகளிலும் தகுதி உடையவர்களாக மாற்றுவது தான் திராவிட மாடல் அரசின் லட்சியம்.
நீட் தேர்வு
நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது. அவரது உயிரை பறித்துவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு நிச்சயம் பணிய தான் போகிறது.
முதலமைச்சர் எதையும் செய்யவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் நாங்கள் செய்யும் திட்டங்களை பார்க்க வேண்டும். தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்று இரண்டு திட்டங்களை கூட நிச்சயமாக வரக்கூடிய காலங்களில் உறுதியாக விரைவாக நிறைவேற்றுவோம்.
வாழ்க வசவாளர்கள்
அதனால்தான் யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய் கொண்டு இருக்கிறார்களே தவிர, விமர்சனம் செய்பவர்கள் இந்து மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் அண்ணா சொன்னது போல் வாழ்க வசவாளர்கள்.
தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் மக்கள் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்" என பேசினார்.