ஸ்டாலின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் - முதல்வர் பெருமிதம்
எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்தார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நான் ஓய்வெடுப்பவன் இல்லை
நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திட்டத்தை அறிவித்துவிட்டோம், நிதி ஒதுக்கிவிட்டோம், அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என ஓய்வெடுப்பவன் நான் இல்லை. கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படித்தான் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
நான் பிரச்னைகளை எதிர்கொள்கிறேன். பிரச்னைகளை தீர்க்கிறேன். மக்களுக்கான திட்டங்களை தீட்டுகிறேன். திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என கள ஆய்வு செய்கிறேன். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். அதனால் தான் இந்த ஸ்டாலின் எங்கே போனாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.
குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதைக் கேட்க முடியாது. அவ்வாறு கேட்க முடியாதவர்களுக்கான ஆட்சி இது. காலை உணவு, தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டம் மூலம் நான் பலன் அடைந்தேன் என்று பின்னாட்களில் எல்லோரும் கூற வேண்டும். எதிர்காலத்திலும் தொடரப்போகும் திட்டங்களால், வரலாற்றில் திராவிட மாடல் அரசும் அதை வழிநடத்துகின்ற ஸ்டாலின் பெயரும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
எடப்பாடி பழனிசாமி
மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடு திமுக மீது மக்கள் வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்ததுபோல் சிரிக்காமல் பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.
எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதிமுக ஆட்சியில் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு என எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பாரா? பொய்க்கு Make up போட்டால் அது உண்மை ஆகிவிடாது. பொய் தான் கூடுதலாக அம்பலப்பட்டு போகும் என்பதை அவர் உணர வேண்டும்” என பேசினார்.