16 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலை வந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன் பின் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஸ்டாலின், "முன்பெல்லாம், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள்.
16 குழந்தைகள்
16 செல்வங்கள் என்னவென்று கேட்டால் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், நிலம், வயது, வாகனம், பொன், பொருள், புகழ். அந்த 16 செல்வங்களை பெறுவதற்கு தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இன்றைக்கு, அளவோடு பெற்று வளர்வோடு வாழுங்கள் என்று சொல்கிறோம்.
ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது, நாம் ஏன் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்" என பேசினார்.
2 நாட்களுக்கு முன் நிகழ்வு ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம். அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும் என பேசியிருந்தார்.