முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ் மண்ணில் இருப்பது போல் உணர்வதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
சிகாகோ
இதனையடுத்து சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன் பின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தமிழ் பாரம்பரிய முறைப்படி முதல்வர் ஸ்டாலின் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். விழாவில் பேசிய அவர், என் உதயிரோடு கலந்திருக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெருமக்களே எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பேசாமல் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்.
லேட்டஸ்ட் வரவேற்பு
தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப்பெருக்கோடு சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு, உங்கள் குடும்பங்களில் ஒருவனாக நான் எனது இதயபூர்வமான நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் சென்று அதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள்.
தமிழ்நாடு
தொழில் வளர்ச்சியை பொருத்தவரைக்கும், நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது, தமிழ்நாட்டில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று சொல்லி, தொழில் தொடங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன். அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.
எந்த நாட்டுக்கு நான் அரசுமுறைப் பயணமாக சென்றாலும், என் எண்ணம் எல்லாம், அங்கு வாழும் நம்முடைய தமிழர்களை சந்திக்க வேண்டும், அங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளை சந்திக்க வேண்டும் என்றுதான் இருக்கும்! அப்படி நான் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடான அமெரிக்காவில் உங்கள் முகங்களை பார்க்கும் போது, மீண்டும் சொல்கிறேன் பேசாமல் அப்படியே நின்று கொண்டு உங்களையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. என பேசினார்.