ஸ்டாலின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை பேச அனுமதித்தது எப்படி என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் அமெரிக்க பயணம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த பயணத்தில் கூகுள், ஆப்பிள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். மேலும் பல்வேறு நிறுவங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே வெளிநாடு சென்ற போது எவ்வளவு முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுடன் தான் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முதல்வர் அமெரிக்கா சென்றுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது முதல்வர் வெளிநாட்டிற்கு சென்று சைக்கிள் ஓட்டுவது இன்ப சுற்றுலா சென்றது போல் உள்ளது.
அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். உடல் நிலை சரி இல்லை என்று சொல்வதற்கு பதிலாக தொழில் முதலீடுகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என பேசினார்.
பாலியல் தொல்லை
மேலும், "சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை பேச அனுமதித்தது எப்படி?. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபர் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இந்த நபர் அண்மையில் அன்பில் மகேஸ் உள்பட அமைச்சர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
மேலும், திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று” என பேசியுள்ளார்.