பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு!
ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பேருந்து விபத்து
சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து சேலத்தை நோக்கி சுற்றுலா பயணிகளை கொண்ட தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிறுவன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காயம் அடைந்த நபர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
முதல்வர் அறிவிப்பு
இந்த துயர சம்பவத்தை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.