தேர்தல் முன்கூட்டியே கூட வரலாம், வீரர்களே ஆயத்தமாவீர்... முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
தமிழக முதலமைச்சர் தனது தொண்டர்களுக்கு தேர்தல் குறித்த அறிவுரை கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் கடிதம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதற்கு திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் தொடர்ந்து உழைக்கவேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் பணிகளை தொடருங்கள். ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி கூட்டம். நாடாளுமன்ற தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர்" என்று கூறியுள்ளார்.
பயிற்சி பாசறை கூட்டம்
இதனை தொடர்ந்து, அவர் "நம் கழகத்தினர் களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். மேலும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு போலி வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
திமுக மீது அவதூறு பரப்பவும், திமுக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களும் இனி வரும் தேர்தலில் அதிகரிக்கக்கூடும் என்பதால், நாம் அதனை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். மேலும், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு உடன்பிறப்புகளாகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை.
உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பரப்புரையை – கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.