கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் - என்னென்ன சிறப்பம்சங்கள்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று(07.10.2024) மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா ராஜன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மு.க. ஸ்டாலின்
மேலும் பூங்காவில் இருந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அதன் பின் பூங்காவை பார்வையிட்டார்.
இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை, 2600 சதுர அடியில் ஆர்க்கிட் குடில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் என பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கட்டணம்
இந்த பூங்கா காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இப்பூங்காவினை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பறவையகத்தில் உள்ள வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.50 எனவும், கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு ரூ.5000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுக்கட்டணங்கள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது. https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் வாயிலாக நுழைவுச்சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது