பிரதமரை எதிர்க்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட 1000 பேர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "2019 நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4% வாக்குகளை பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
முந்தைய தேர்தலை விட 14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அதிமுக 12.58% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்து விட்டிருக்கார் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார். திமுக என்றால் மட்டும் எடப்பாடி கத்தி கத்தி பேசுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா? டங்க்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக எடப்பாடி பாஜகவை கண்டித்தாரா?
7வது முறை ஆட்சி
திமுக என்றால் கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான் அடிப்படை. பழனிசாமியின் அரசியலுக்கு என்ன அடிப்படை? துரோகத்தைத் தவிர எடப்பாடி பழனிசாமி பெருமையாக சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது?
அதிமுக, பாஜக, புதிது புதிதாக முளைக்குற கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. இது இன்று நேற்றல்ல 75 வருடமாக நாம் எதிர்கொள்ளும் சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது. நம்மோட சொல்லாற்றல், எழுத்தாற்றல், மக்கள் நலன் ஆகியவற்ற நம்பித்தான் நாம் செயல்படணும்.
நம்மை எதிர்ப்பவர்கள் எல்லாருமே நமக்கு எதிரியா இருக்க தகுதியுடையவங்க இல்லை.2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக 7வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும்" என பேசினார்.